பஸ் கண்டக்டரை தாக்கிய தொழிலதிபர் மகன் மீது போலீசார் வழக்கு
தாராபுரத்தில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தொழிலதிபர் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தொழிலதிபர் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தாக்குதல்
தாராபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து தேனி செல்வதற்காக தாராபுரம் வந்தது. அப்போது பஸ்சை டிரைவர் ரத்தினசாமி (வயது 45) ஓட்டி வந்தார். அதில் கண்டக்டராக கோபால கிருஷ்ணன் (45) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
அந்த பஸ் தாராபுரம் அமராவதி ரவுண்டானா அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது தாராபுரம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சக்திவேல் மகன் நிர்மல்குமார் (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது பஸ் டிரைவர் ரத்தினசாமி ஹாரன் அடித்தும் நிர்மல்குமார் விலகவில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த நிர்மல் குமார், பஸ் டிரைவர் ரத்தினசாமி மற்றும் கண்டக்டர் கோபால கிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கண்டக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது.
வழக்கு
இதில் காயம் அடைந்த கண்டக்டர் கோபால கிருஷ்ணன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இச்சம்பவம் குறித்து கோபாலகிருஷ்ணன் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.