விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் வீடுகளில் முடங்கிய மக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர்.

Update: 2022-01-09 17:40 GMT

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.  

இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடி கிடந்தது.

வழக்குப்பதிவு

மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா  தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் மாவட்டத்தின் எல்லைகளாக உள்ள 12 இடங்களிலும்,  நகர பகுதிக்கு வரும் சாலைகள் என முக்கிய சாலைகளிலும் தடுப்புகளை அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 


இதில், விழுப்புரத்தில் புதுச்சேரி செல்லும் சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் ஊர் சுற்றிய சுமார் 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, சிலரது வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கலெக்டர் ஆய்வு

இதற்கிடையே விழுப்புரம் நகரில் மாவட்ட கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்று ஆய்வு செய்தனர். 

புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த அவர்கள் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி அத்தியாவசிய தேவைக்கு செல்கிறார்களா? அரசு அனுமதி வழங்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார்களா? என்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வந்த கிருமிநாசினி தெளிக்கும பணியையும் கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

கடும் நடவடிக்கை

அப்போது கலெக்டர் மோகன் கூறுகையில், முழு ஊர டங்கின் போது, பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றுவதை தடுக்கும் வகையில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் ரெயில் பயணம் மற்றும் திருமணம் போன்றவற்றுக்கு செல்பவர்கள் அதற்கான பயணச்சீட்டு, அழைப்பிதழ்கள் போன்றவை வைத்திருந்தால் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

 தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய தினம் 100சதவீதம் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், விழுப்புரம் உதவி கலெக்டர் ஹரிதாஸ், துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

திண்டிவனம்

இதேபோல் திண்டிவனம் நகரில் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. திண்டிவனத்திலிருந்து சென்னை, புதுச்சேரி, திருச்சி, காஞ்சீபுரம் செல்லும் அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து ஏதுமின்றி இருந்தது. முழு முடக்கத்தால் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளே முடங்கினார்கள்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு டி.ஐ.ஜி. பாண்டியன் இரவு நேர ஊரடங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா , கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தேவகுமார், அபிஷேக் குப்தா மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


செஞ்சி

செஞ்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தங்கம், தங்க குருநாதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் திண்டிவனம் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஏகாம்பரம், தாசில்தார் பழனி, வருவாய் ஆய்வாளர் கண்ணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் ஆகியோரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டியிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமையில்  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆம்ஸ்டிராங், போலீஸ்காரர்கள் இளவரசன், நாகராஜன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி, பயணம் செய்வதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்