கொரோனா ஊரடங்கால் வேலை இழப்பு: வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டனர்
கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு இல்லாததால் புதுக்கோட்டையில் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
புதுக்கோட்டை:
கொரோனா ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் கடும் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் காலங்களிலும் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் தங்கி இருந்து பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் பலர் வேலைவாய்ப்பு இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் தங்களது சொந்த ஊர் நோக்கி புறப்பட தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுமான பணியில் பணியாற்றிவந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர் நேற்று தங்களது உடைமைகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். ராமேசுவரத்தில் இருந்து புவனேஸ்வர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் புதுக்கோட்டையிலிருந்து பயணம் செய்தனர்.
போலீஸ் வேன்
ஊரடங்கால் தங்களுக்கு வேலை வாய்ப்பு ஏதும் இல்லாததால் சொந்த ஊர் புறப்பட்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக முழு ஊரடங்கால் பஸ் வசதி, வாகன போக்குவரத்து இல்லாததால் அவர்கள் சாலையில் நடந்து வந்தனர். அவர்களை டவுன் போலீசார் போலீஸ் வேனில் ஏற்றி புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் கொண்டு இறக்கி விட்டனர். போலீசாரின் மனிதாபிமான செயலுக்கு வடமாநில தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.