பாலக்கோடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
பாலக்கோடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
பாலக்கோடு:
பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான கணபதி கொட்டாய், கூசிக்கொட்டாய், காவாப்பட்டி, மணியகாரன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அச்சுவெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெல்லத்திற்கு வண்ணம் சேர்ப்பதற்காக அதிக அளவில் ஹைட்ரோஸ் எனப்படும் ரசாயன பொருள், ரவை, மைதா, கேசரி பவுடர் உள்ளிட்ட பொருட்கள் சேர்ப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது வெல்லத்தில் ரசாயன பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். மேலும் ரசாயன பவுடர்கள் கலக்காமல் வெல்லம் தயாரிக்க வேண்டும். மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆலை உரிமையாளர்களுக்கு அவர் எச்சரிகை விடுத்தார். தொடர்ந்து ஏற்கனவே தயாரித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த வெல்லங்களின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்து சென்றார்.