தட்டார்மடத்தில் பயங்கரம்: தகராறை தட்டிக்கேட்ட வியாபாரி படுகொலை

தகராறு செய்ததை தட்டிக்கேட்ட வியாபாரி படுகொலை செய்யப்பட்டார

Update: 2022-01-09 16:50 GMT
சாத்தான்குளம்:
தட்டார்மடத்தில் நண்பரிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோவில் பூசாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விறகு கரி வியாபாரி
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் நயினார்புரத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 72). இவர் விறகு கரி வியாபாரம் செய்து வந்தார். தட்டார்மடம் தவசியாபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (75).
நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலையில் தட்டார்மடம் பஜாரில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
தகராறை தட்டிக்கேட்டார்
அப்போது அங்கு வந்த தட்டார்மடம் தவசியாபுரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி மாணிக்கம் (47), அவருடைய நண்பரான ராமசாமி மகன் ஹரி கிருஷ்ணன் (29) ஆகிய 2 பேரும் மது போதையில் கோவிந்தசாமியிடம் தகராறு செய்து அவரை தாக்கினர்.
இதனை ராமநாதன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணிக்கம், ஹரி கிருஷ்ணன் ஆகிய 2 பேரும் ராமநாதனை சரமாரியாக அடித்து உதைத்து கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.
சாவு
இதில் பலத்த காயமடைந்த ராமநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவில் ராமநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பலத்த பாதுகாப்பு
தலைமறைவான கொலையாளிகளை பிடிப்பதற்காக, சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தட்டார்மடம் பகுதியில் பதுங்கியிருந்த மாணிக்கம், ஹரி கிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
தட்டார்மடம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்