புதுச்சேரி மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் புதுவை மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-09 16:44 GMT
புதுச்சேரி, ஜன.
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் புதுவை மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிகாலை 5 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.
முழு ஊரடங்கை தொடர்ந்து புதுச்சேரி - தமிழக மாநில எல்லைகளான கோரிமேடு, கனகசெட்டிகுளம், முள்ளோடை, மதகடிப்பட்டு பகுதிகளில் தமிழக போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாருடன் வாக்குவாதம்
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு நுழைய முயன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர். மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிக்காக சென்ற வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். அப்போது பொதுமக்கள் சிலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து மீண்டும் புதுச்சேரிக்குள் அனுப்பி வைத்தனர். இதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வாகனங்கள் எந்தவித தடையும் இல்லாமல் வந்தன.
பஸ்கள் இயங்கவில்லை
தமிழக எல்லை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. புதுவையில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் புதுவையில் இருந்து கடலூர், விழுப்புரம் செல்லும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.
புதுவை அரசு மற்றும் தனியார் நகர பஸ்கள் மாநில எல்லை வரை மட்டும் இயக்கப்பட்டன. தமிழக அரசு பஸ்கள் மற்றும் பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்காததால் புதுவை புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம், வானூர் பகுதி சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பாகூர், கரையாம்புத்தூர் உள்ளிட்ட தொலைதூர கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்காததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மதகடிப்பட்டு - முள்ளோடை
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு எல்லையில் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்‌. அப்போது தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களை வழிமறித்து, அதில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனரா என்று சோதனையிட்டனர். அதன் பிறகே புதுச்சேரி பகுதிக்குள் அனுமதித்தனர்.
இதேபோல் புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள முள்ளோடை எல்லையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பிரமணியன், ரவிக்குமார் (பொறுப்பு) தலைமையில் கிருமாம்பாக்கம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
அப்போது அத்தியாவசிய தேவையின்றி வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
____

மேலும் செய்திகள்