பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் வடமாநில தொழிலாளர்கள் அவதி
முழு ஊரடங்கை அறியாமல் கோவைக்கு ரெயிலில் வந்த வடமாநில தொழிலாளர்கள், பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
கோவை
முழு ஊரடங்கை அறியாமல் கோவைக்கு ரெயிலில் வந்த வடமாநில தொழிலாளர்கள், பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
வடமாநில தொழிலாளர்கள்
கோவை வழியாக நேற்று டெல்லி-திருவனந்தபுரம், தன்பாத்-ஆலப்புழை உள்பட ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்களில் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கோவைக்கு வந்தனர்.
ஆனால் பொது போக்குவரத்து மற்றும் வாடகை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால், அவர்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதை அறிந்த சில ஆட்டோ டிரைவர்கள் வந்து, அவர்களை பணியிடங்களுக்கு அழைத்து சென்றனர்.
கூடுதல் கட்டணம்
இதுகுறித்து வடமாநிலத்தவர்கள் கூறும்போது, இங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தெரியாது. ஒருசில ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சோமனூர், கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், அவினாசி உள்ளிட்ட நீண்ட தூரங்களுக்கு செல்பவர்கள் ஆட்டோவில் பயணிக்க முடியாமலும், வேறு வாடகை வாகனங்கள் கிடைக்காமலும் திகைத்து நின்றனர் என்றனர்.
தொற்று பரவும் அபாயம்
ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறுகையில், கோவைக்கு ரெயிலில் குடும்பத்துடன் வடமாநிலத்தவர் வருகின்றனர். முழு ஊரடங்கு என்பதால், அவர்களால் தங்களது பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை. நடைமேடைக்கு மத்திய ரிசர்வ் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ரெயில் நிலைய வாயிலில் கூட்டமாக நின்றனர். இதன் காரணமாக தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.