பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-01-09 16:07 GMT
பரமத்திவேலூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அச்சு வெல்லம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம். பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், கபிலர்மலை, பொன்மலர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. 
இங்கு விளையும் கரும்புகள் அனைத்தும் ஜேடர்பாளையம், சோழசிராமணி, கொத்தமங்கலம், அய்யம்பாளையம், அண்ணாநகர், கபிலர்மலை உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வெல்லம் தயார் செய்யப்படும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அச்சுவெல்லம், குண்டு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை தயார் செய்யப்படுகிறது.
வெல்லம் விற்பனை சந்தை
ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆலைகளிலேயே தங்கி வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயார் செய்யப்படும் வெல்லங்களை ஆலை உரிமையாளர்கள் 30 கிலோ கொண்ட மூட்டைகளாக (சிப்பங்களாக) கட்டி பிலிக்கல்பாளையத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம் சர்க்கரை விற்பனை சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். 
இங்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் ஏலத்தில் தரத்திற்கு தகுந்தார் போல் வெல்லம் ஏலம் விடப்படுகிறது. நாமக்கல், கரூர், சேலம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்து செல்கின்றனர்.
அரசு கொள்முதல் செய்யவில்லை
ஏலத்தில் எடுக்கப்பட்ட வெல்லங்களை வியாபாரிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்புகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் உள்ள ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கியபோது பிலிக்கல்பாளையம் வெல்லம் சர்க்கரை ஏல சந்தையில் இருந்து வெல்லத்தை மொத்தமாக கொள்முதல் செய்து  வினியோகம் செய்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் தயார் செய்யப்படும் வெல்லங்களை அரசு கொள்முதல் செய்யவில்லை
கோரிக்கை
எனவே அடுத்து வரும் பொங்கல் பண்டிகை காலங்களிலாவது தமிழக அரசு வெல்லத்தை மொத்தமாக கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசில் சேர்த்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெல்ல உற்பத்தியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்