முழு ஊரடங்கால் சுற்றுலா மையங்கள் சாலைகள் வெறிச்சோடின
நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக, சுற்றுலா மையங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடின. போலீசார் தடுப்புகள் வைத்து வாகன சோதனை நடத்தினர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக, சுற்றுலா மையங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடின. போலீசார் தடுப்புகள் வைத்து வாகன சோதனை நடத்தினர்.
கடைகள் அடைப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.
இதனால் ஊட்டி நகரில் கமர்சியல் சாலை, லோயர் பஜார், மெயின் பஜார், எட்டின்ஸ் சாலை, சேரிங்கிராஸ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மளிகை, காய்கறி, பழ கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நகை துணிக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அனைத்து நுழைவு வாயில்களும் அடைக்கப் பட்டு, 1300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.
சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கால் ஊட்டியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, சேரிங்கிராஸ் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மருந்தகங்கள், பால் விற்பனை செய்யும் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டது.
உணவகங்களில் பார்சல் வினியோகம் செய்ய மட்டும் அனுமதிக்கப் பட்டது. ஊட்டியில் 2 அம்மா உணவகங்கள் இயங்கியது. பொது போக்குவரத்து இல்லாததால் ஊட்டி மத்திய பஸ் நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி இருந்தது. அரசு பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.
சுற்றுலா மையங்கள்
ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. வழக்கமாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப் படும். தொற்று பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட தால் சுற்றுலா மையங்கள், பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
முழு ஊரடங்கையொட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊட்டி சேரிங்கிராஸ் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் போலீசார் தடுப்புகள் வைத்து கண்காணித்தனர்.
அவசியமின்றி வெளியே இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை சோதனை செய்தனர். தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
கூடலூர்
அதுபோன்று கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன தொடர்ந்து வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
கூடலூர்- மைசூரு, ஊட்டி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மலப்புரம் வயநாடு உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததால் அனைத்து தெருக்களும் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. உணவகங்களில் பார்சல் சர்வீஸ் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என யாரும் இல்லாததால் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருந்தது.
போலீசார் பாதுகாப்பு
மேலும் வாடிக்கையாளர்கள் வரத்து இல்லாததால் பெரும்பாலான மருந்துக் கடைகளும் காலையில் திறக்கப்பட்டு பகல் 12 மணிக்குள் மூடப்பட்டது. இதனிடையே கூடலூர் பகுதியில் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு நின்றிருந்தனர்.
இதேபோல் மசினகுடி, நடுவட் டம், பைக்காரா, டி.ஆர். பஜார் உள்ளிட்ட இடங்களிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் அனைத்து சுற்றுலா மையங்களும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கிருமி நாசினி தெளிப்பு
ஊரடங்கு காரணமாக நேற்று கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து, பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் இருந்தது. இதையடுத்து கோத்தகிரி நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில், கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.
கோத்தகிரி பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் மேற்பார்வையில், சுகாதார பணியாளர்கள் லாரிகள் மூலம் சென்று, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பஸ் நிலையம், முக்கிய சாலைகள், நிழற்குடைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்தனர்.
எல்லையில் கண்காணிப்பு
கூடலூரில் இருந்து மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். இதேபோல் கூடலூரில் இருந்து கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
உரிய ஆவணங்கள் இன்றி வரும் நபர்களை திருப்பி அனுப்பினர். இதேபோல் உள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே இயக்கப்படுகிறதா என தணிக்கை செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, தமிழக அரசின் முழு ஊரடங்கை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றாத வாகனங்கள் மற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.