மதுரையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் போதை பொருளை கடத்த முயற்சி

மண்எண்ணெய் அடுப்பில் மறைத்து வைத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இதுெதாடர்பாக வாலிபரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-09 14:21 GMT
மதுரை, 
மண்எண்ணெய் அடுப்பில்  மறைத்து வைத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இதுெதாடர்பாக  வாலிபரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் விமானத்தில் போதை பொருள் கடத்தி செல்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
அதன்படி, இலங்கை செல்ல இருந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஷகில் அகமது (வயது28) என்பவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். மேலும், அவர் கொண்டு வந்த உடமைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது, அவர் கொண்டு வந்த பையில் மண்எண்ணெய் அடுப்புகள் இருந்தது. அதில் ஒன்று மட்டும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் சந்ேதகம் அடைந்தனர்.
கைது
அதனை பிரித்து சோதனையிட்ட போது அடுப்பின் அடிப்பகுதியில் ஒரு டிபன் பாக்சில் வெள்ளை நிறத்திலான விலை உயர்ந்த போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து ஷகில் அகமதுவிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, மதுரை விமான நிலைய வாசலில் ஒருவர் இந்த அடுப்பை இலங்கையில் சேர்த்து விடும்படி தன்னிடம் கொடுத்ததாக கூறினார்.
அதன்பேரில் ஷகில் அகமதுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்து, ஆய்வகத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே அது எந்த மாதிரியான போதை பொருள் என்பதும், அதனுடைய சரியான மதிப்பும் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்