திருச்செந்தூர் சென்ற ரெயிலில் உடுமலையில் இருந்து 13 பேர் மட்டுமே பயணம்

உடுமலையில், பயணிகள் கூட்டம் இல்லாமல் ரெயில்கள் இயங்கின. திருச்செந்தூர் சென்ற ரெயிலில் உடுமலையில் இருந்து 13 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.

Update: 2022-01-09 14:13 GMT
உடுமலை
உடுமலையில், பயணிகள் கூட்டம் இல்லாமல் ரெயில்கள் இயங்கின. திருச்செந்தூர் சென்ற ரெயிலில் உடுமலையில் இருந்து 13 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.
 ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில், உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயிலில் செல்லும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மற்றும்சனிக்கிழமை ஆகிய 2நாட்கள் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் ஓரளவு கூட்டம் இருந்தது. 
ரெயில்களில் கூட்டம் இல்லை
இந்த நிலையில் முழு ஊரடங்கான நேற்று பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற ரெயிலில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. 12 பெட்டிகளுடன் சென்ற இந்த ரெயிலில் பல பெட்டிகள், பயணிகள் இல்லாமல் காலியாக சென்றன. மேலும் உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து 13 பயணிகள் மட்டுமே இந்த ரெயிலில் சென்றனர். வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றுமுன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், பாலக்காடு, உடுமலை வழியாக மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 6.30 மணிக்கு உடுமலைக்கு வந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலிலும் பயணிகள் கூட்டம் இல்லை. இந்த ரெயிலில் உடுமலையில் இருந்து 6 பயணிகள் மட்டுமே சென்றனர். இதேபோன்று மதுரை-கோவை, சென்னை-பாலக்காடு இடையிலான ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் இல்லை.
வாகனங்கள்
உடுமலையில் முழு ஊரடங்கையொட்டி மத்திய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் ஊர்க்காவல் படையினரும் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்தனர். 
இந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் கொழுமம் சாலையில் சென்றபோது மதுரையில் இருந்து கோவைக்கு செல்லும் ரெயில் வருவதற்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது.அப்போது ரெயில்வே கேட்டின் இரண்டு பக்கமும் வாகனங்கள் அதிகமாக நின்றிருந்தன. முழு ஊரடங்கு அமல்படுத்துவதையொட்டி பொதுமக்கள்அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று அரசு கூறினாலும், அதை சிலர் உதாசீனப்படுத்தும் வகையில் வெளியில் சென்று வந்தனர்.

மேலும் செய்திகள்