பழனிக்கு பாதயாத்திரை சென்றபோது பரிதாபம் பக்தர்கள் கூட்டத்துக்குள் சரக்கு வேன் புகுந்து வாலிபர் பலி பெண் உள்பட 2 பேர் படுகாயம்
பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் சரக்கு வேன் புகுந்து வாலிபர் பலியானார். ெபண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கன்னிவாடி:
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.
அதன்படி மதுரை மாவுத்தன்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 24) என்பவர், தனது தாயார் பழனியம்மாள் மற்றும் பக்தர்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்.
செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்த குயவநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை 5½ மணியளவில் அவர்கள் நடந்து வந்து கொண்டு இருந்தனர்.
கூட்டத்துக்குள் புகுந்த வேன்
அப்போது, மதுரையில் இருந்து பழனிக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று பின்னால் வந்தது. அந்த வேன், பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் திடீரென புகுந்தது.
இந்த விபத்தில் சதீஷ்குமார், மதுரை சிலைமானை சேர்ந்த ரகுராமன் (40), மதுரை காளவாசலை சேர்ந்த ஐஸ்வர்யா (24) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சக பக்தர்கள் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கன்னிவாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாலிபர் பலி
பின்னர் சதீஷ்குமாரை மேல்சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் காயம் அடைந்த ரகுராமன், ஐஸ்வர்யா ஆகியோருக்கு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குப்பதிவுசெய்து, மதுரை நரிமேடுவை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் சரவணகுமாரை (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.