கன்னிவாடி துணை மின்நிலையத்தில் கொழுந்து விட்டு எரிந்த டிரான்ஸ்பார்மர் 6 மணி நேரம் மின்தடை

கன்னிவாடி துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

Update: 2022-01-09 13:54 GMT
கன்னிவாடி:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் துணை மின்நிலையம் உள்ளது. நேற்று காலை 9 மணி அளவில் இங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
சிறிதுநேரத்தில் டிரான்ஸ்பார்மரில் பல அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு மேல் அனல் பறந்தது. யாரும் அருகில் நெருங்க முடியவில்லை. விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சுருள், சுருளாக எழுந்தது. இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது.
இதனைக்கண்டு துணை மின் நிலையத்தில் இருந்த 4 ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். இதேபோல் மின்சார டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரியும் தகவல் காட்டுத்தீ போல அப்பகுதியில் பரவியது. இதனையடுத்து வீடுகளுக்குள் இருந்த பொதுமக்களும் தெருக்களில் திரண்டனர்.
தொழில்நுட்ப கோளாறு
இதுகுறித்து கன்னிவாடி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், ஆத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது பொதுமக்கள் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க உதவி செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
6 மணி நேரம் மின்தடை
இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதேபோல் சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடினர். அவர்களை கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் கட்டுப்படுத்தினர்.
டிரான்ஸ்பார்மர் எரிந்ததால் அப்பகுதியில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தீவிபத்தில் எரிந்த டிரான்ஸ்பார்மரின் சேதமதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கருதப்படுகிறது. மின்சார டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்த சம்பவம், கன்னிவாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்