சென்னையில் போலீசார் கண்காணிப்பு தீவிரம்: முககவசம் அணியாத 7,616 பேரிடம் ரூ.15 லட்சம் அபராதம் வசூல்
சென்னையில் ஒரே நாளில் முககவசம் அணியாத 7,616 பேரிடம் ரூ.15 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கை மீறிய 788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் புயல் வேகத்தில் பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுக்கவும் தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இரவு நேர ஊரடங்கில் அத்தியாவசிய பணிகள் தவிர, தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி சென்னையில் இரவு நேர ஊரடங்கில் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். 312 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு நேர ஊரடங்கை மீறி அவசிய தேவையில்லாமல் வலம் வந்த 707 மோட்டார் சைக்கிள்கள், 59 ஆட்டோக்கள் உள்பட 788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையின்போது மதுபோதையில் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 15 மோட்டார் சைக்கிள், 8 ஆட்டோக்கள் உள்பட 30 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொரோனா, ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்கு முககவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் மக்களிடையே அலட்சியப்போக்கு இருந்து வருகிறது. எனவே முககவசம் அணியாமல் வெளியே வருபவர்களை ஆங்காங்கே போலீஸ் சிறப்பு குழுவினர் மடக்கி பிடித்து தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்தவகையில் முககவசம் அணியாத குற்றத்துக்காக சென்னையில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 616 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் ரூ.15 லட்சத்து 23 ஆயிரம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.