ஆபத்தான முறையில் பயணம் செய்து வரும் வாகன ஓட்டிகள்: கூவம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்
கூவம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை பகுதியில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக கடம்பத்தூர் மப்பேடு நெடுஞ்சாலையில் உள்ள சத்தரை தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் மூழ்கி சேதமடைந்தது. தற்போது இந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளப்பெருக்கால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
தற்போது இந்த சத்தரை தரைப்பாலத்தின் கீழ் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்த வழியாக பொதுமக்கள் தரைப்பாலத்தை கடந்து செல்ல விடாதவாறு போலீசார் பாலத்தின் இருபுறங்களிலும் இரும்பிலான அளப்பெரிய தடுப்புகளை வைத்து பாதையை அடைத்தனர்.
இதனால் அந்த வழியாக வரும் பொதுமக்கள் மப்பேடு, கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம், கடம்பத்தூர், கூவம், நரசிங்கபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றி கொண்டு அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தில் வாகன ஓட்டிகள் அபாயத்தை உணராமல் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
கரணம் தப்பினால் ஆற்று வெள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை இருந்தும், அதை கண்டுகொள்ளாமல் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் சென்று வருகிறார்கள்.
எனவே தரைப்பகுதியில் அடித்துச் செல்லப்பட்டதில், சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.