காங்கிரசார் பாதயாத்திரையை கைவிட வேண்டும்- போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வலியுறுத்தல்

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் காங்கிரசார் பாதயாத்திரையை கைவிட வேண்டும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வலியுறுத்தினார்.;

Update: 2022-01-08 20:47 GMT
பெங்களூரு:
  
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

அத்துமீறி நடக்க வேண்டாம்

  கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் யாரும் ஊரடங்கு உத்தரவை மீறினால், அவர்கள் மீது என்.டி.எம்.ஏ. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

  விதிமுறைகளை மீறும் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொள்ள வேண்டாம் என்றும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அரசுடன் இணைந்து பணியாற்றவும், ஒத்துழைப்பு அளிக்கவும் மக்கள் தயாராகி விட்டனர். மக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கைவிட வேண்டும்

  கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசுடன் கைகோர்த்து செயல்பட மக்கள் தயாராகி விட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் தலைவர்களும் பாதயாத்திரையை கைவிட்டு, அரசுடன் கைகோர்த்து செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன். கொரானாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசின் விதிமுறைகளை காங்கிரஸ் தலைவர்களும் பின்பற்ற வேண்டும். அரசுடன் கைகோர்த்து செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  கொரோனா விதிமுறைகளை மீறி பாதயாத்திரை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் உத்தரவை சாதாரண பொதுமக்கள் கூட பின்பற்றுகிறார்கள். அதனால் ஊரடங்கு அமலில் இருப்பதால், பாதயாத்திரையை காங்கிரசார் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கொரோனா விதிமுறைகளை மீறினால் சட்டப்படி காங்கிரஸ் தலைவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
  இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

மேலும் செய்திகள்