கடைவீதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்

கடைவீதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.;

Update:2022-01-09 01:06 IST
பெரம்பலூர்:

காய்கறிகள் வாங்க வந்தனர்
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கும் அறிவித்து அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 6-ந்தேதி முதல் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி கிடையாது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட், சாலையோர காய்கறி கடைகளில் காய்கறிகள் வாங்குவதற்கும், மளிகை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும், இறைச்சி கடைகளில் இறைச்சி வாங்குவதற்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடைவீதிகளில் கூட்டம்
முழு ஊரடங்கில் பொது-தனியார் போக்குவரத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால், நேற்று பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரம்பலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைவீதிகளிலும், மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மேலும் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொங்கல் பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் கரும்பு, மஞ்சள் குலைகள், பானை ஆகியவற்றின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியது. மேலும் நகைக்கடை, துணிக்கடை, பாத்திர கடைகளில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
இரவு 10 மணி முதலே...
டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படுவதால், நேற்று டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் வாங்க மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் நேற்று இரவு 10 மணி முதலே முழு ஊரடங்கு தொடங்கியது. போலீசாரும் ரோந்து பணியில், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்