கடைவீதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்
கடைவீதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
அரியலூர்:
மக்கள் கூட்டம்
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கும் அறிவித்து அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 6-ந்தேதி முதல் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி கிடையாது. அரியலூர் மாவட்ட பகுதிகளிலும் நேற்று கடைகளில் கூட்டம் காணப்பட்டது. அரியலூர் நகரில் கடைகளுக்கு வந்த மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. காய்கறி, மளிகை, ஜவுளி, நகை, இறைச்சி கடைகளில் ஏராளமானவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கினார்கள். டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் அலைேமாதியது. இதனால் விற்பனை இரு மடங்காக உயர்ந்தது. அத்தியாவசிய கடைகளான மருந்து, பால், குடிநீர் மற்றும் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இன்று தடை இல்லை. நேற்று இரவு 10 மணி முதல் நாளை(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் புறநகர் பகுதிகளில் சிமெண்டு ஏற்றி வந்த நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டன.