சிறுமிகளை திருமணம் செய்த 2 வாலிபர்கள் மீது போக்சோ வழக்கு
சிறுமிகளை திருமணம் செய்த 2 வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் குடிக்காட்டை சேர்ந்த ராஜலிங்கம் மகன் ராஜ்குமார் (வயது 23). இவர் 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்த நிலையில் தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து அந்த சிறுமி பரிசோதனைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்தபோது, திருமணத்தின்போது சிறுமியாக இருந்ததை அறிந்த மருத்துவ அலுவலர்கள் இதுகுறித்து அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி நடத்திய விசாரணையில், சிறுமியின் சம்மதமின்றி கட்டாய திருமணம் செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரின் பெற்றோரான ராஜலிங்கம், விஜயா, சிறுமியின் பெற்றோர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரின் தந்தை ராஜலிங்கம் மற்றும் சிறுமியின் பெற்றோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரையும், அவரது தாய் விஜயாவையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் அதே கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்த ரவியின் மகன் ரஞ்சித்குமார்(24). இவர் வாகனம் வாங்கி விற்கும் இடைத்தரகராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும் ரஞ்சித்குமாரின் பெற்றோர் ரவி, ரேவதி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித்குமார் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.