பஞ்சாப் முதல்-மந்திரியின் உருவ பொம்மையை எரித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பஞ்சாப் முதல்-மந்திரியின் உருவ பொம்மையை எரித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையில் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தியதாகவும், ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்தும் பெரம்பலூரில் பா.ஜ.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வினர் வாயில் கருப்பு துணி கட்டியும், சிலர் கைகளில் தீப்பந்தம் ஏந்தியும் கலந்து கொண்டனர். அவர்கள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென்று பஞ்சாப் மாநில முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னியின் உருவப்படத்தை செருப்பால் அடித்து, உருவப்படத்தை தீப்பந்தத்தால் தீ வைத்து எரித்தனர். மேலும் பா.ஜ.க.வினர் மறைத்து வைத்திருந்த பஞ்சாப் மாநில முதல்-மந்திரியின் உருவ பொம்மையை ஆர்ப்பாட்டத்துக்கு எடுத்து வந்து கீழே போட்டு காலால் மிதித்தும், செருப்பால் அடித்தும், தீப்பந்தத்தால் தீயிட்டு கொளுத்தியதாலும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் பஞ்சாப் முதல்-மந்திரியை கண்டித்து கோஷங்களை எழுப்பியதோடு, பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு போதிய அளவு போலீசார் பாதுகாப்பு பணிக்கு வராததால் பா.ஜ.க.வினர் உருவ பொம்மையை எரித்ததை தடுக்க முடியவில்லை. இதையடுத்து பெரம்பலூர் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சேர்ந்த 20 பேர் மீது 4 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.