புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-01-08 19:22 GMT
சாலையில் கொட்டப்படும் குப்பை
பூதப்பாண்டி பேரூராட்சி கீழரத வீதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. பலநேரங்களில் கோழி, நாய் போன்றவை குப்பைகளை கிளறி சாலையில் வீசி தள்ளுகின்றன. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பரமசிவன், பூதப்பாண்டி. 
துர்நாற்றத்தால் பயணிகள் அவதி
ஆரல்வாய்மொழி மெயின்ரோட்டில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இதன் அருகில் ஒரு பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. இந்த நிழற்குடையின் பின்புறமுள்ள கழிவுநீர் ஓடையில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலையன்பன், ஆரல்வாய்மொழி.
தெருவிளக்கு எரியவில்லை
ராமன்புதூரில் இருந்து தட்டான்விளை வழியாக ஏ.ஆர்.கேம்ப் செல்லும் சாலையில் விநாயகர் நகர் அருகில் பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதியழகன், பெரியவிளை.
கால்நடை டாக்டரை நியமிக்க வேண்டும்
பூதப்பாண்டி தாலுகா அலுவலகம் அருகே கால்நடை மருந்தகம் உள்ளது. இங்கு உதவி கால்நடை டாக்டர் இல்லை. இதனால் பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்காக தாழக்குடி போன்ற ஊர்களுக்கு கொண்டு செல்லவேண்டியது உள்ளது. எனவே கால்நடைகளை வளர்ப்பவர்கள் நலன்கருதி பூதப்பாண்டி கால்நடை மருந்தகத்தில் நிரந்தரமாக கால்நடை உதவி டாக்டரை நியமிக்க வேண்டும்.
-தங்கம், பூதப்பாண்டி.
பயணிகள் நிழற்குடை வேண்டும்
தோவாளை அருகே சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விசுவாசபுரம் (பண்டாரபுரம்) உள்ளது. இந்த பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் பஸ்களில் வெளியூர் செல்கிறார்கள். இங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.விஜேஷ், விசுவாசபுரம். 
சுகாதார சீர்கேடு
தர்மபுரம் ஊராட்சி 1-வது வார்டு வத்தக்காவிளையில் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் ஓடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.எஸ்.பிரசாந்த், வத்தக்காவிளை.
போக்குவரத்து போலீசாரை நிறுத்த வேண்டும்
நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் சந்திப்பில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் நடந்து செல்கிறவர்கள், மிதிவண்டிகளில் செல்கிறவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்கள் சாலையை குறுக்காக கடந்து செல்லும் போது பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால், விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகவே, வெட்டூர்ணிமடம் சந்திப்பில்போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-ஐஸ்டின் ஜாஸ்ப்பர், வெட்டூர்ணிமடம்.

மேலும் செய்திகள்