சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலில் சிக்கிய உயர் அழுத்த மின்கம்பியால் பரபரப்பு
அருப்புக்கோட்டை அருகே அறுந்து விழுந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயில் என்ஜினில் உயர் அழுத்த மின்கம்பி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மின் இணைப்பு அதில் கொடுக்கப்படாததால் பயணிகள் தப்பினர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே அறுந்து விழுந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயில் என்ஜினில் உயர் அழுத்த மின்கம்பி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மின் இணைப்பு அதில் கொடுக்கப்படாததால் பயணிகள் தப்பினர்.
உயர் மின்னழுத்த கம்பிகள்
விருதுநகர்-மானாமதுரை இடையே அகல ெரயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கு தேவைப்படும் உயர் அழுத்த மின்வசதிக்காக மின்கம்பிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயில் வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் இந்த தடத்தில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 8.25 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயில் அருப்புக்கோட்டை அருகே அதிகாலை 5 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
என்ஜினில் சிக்கிய மின் கம்பி
தொட்டியங்குளம் ரெயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் பொருத்தி இருந்த உயர் அழுத்த மின்கம்பிகள் திடீரென அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன.
சிலம்பு எக்ஸ்பிரஸ் அந்த பகுதியில் வந்த போது, என்ஜினில் அந்த கம்பிகள் சிக்கி பின்னிக் கொண்டன. இதனால் பயங்கர சத்தம் கேட்டது, இதனால் அதில் பயணித்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ரெயில் என்ஜின் டிரைவர், மிட்டால் லால் மீனா துரிதமாக செயல்பட்டு சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தினார்.
அவர், கீழே இறங்கி பார்த்தபோது மின்கம்பிகள் ரெயில் என்ஜினில் சிக்கி இருப்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த ெரயில்வே பணியாளர்கள் என்ஜினில் சிக்கியிருந்த மின்கம்பிகளை அகற்றினர்.
இதற்கிடையே ரெயில் என்ஜினில் மின் கம்பிகள் சிக்கியதை அறிந்ததும் பயணிகள் ரெயிலில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கி விட்டனர். அவர்கள் என்ஜினில் சிக்கிய மின்கம்பியை அகற்றும் வரை அச்சத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தனர்.
பாதிப்பு இல்லை
இதனையடுத்து சுமார் 1½ மணி நேர தாமதத்திற்கு பின்னர் ெரயில் அங்கிருந்து புறப்பட்டு, விருதுநகருக்கு காலை 6.30 மணிக்கு வந்தது.
1½ மணி நேரம் ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். ரெயில் நடுவழியில் நின்றிருந்த போது சில பயணிகள் காட்டு வழியாக நடந்து சென்று ஆட்டோ பிடித்துச் சென்றனர்.
உயர் அழுத்த கம்பியில் ஒருவேளை மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் நல்ல வேளையாக மின் இணைப்பு இல்லாததாலும், ரெயில் நிறுத்தப்பட்டதாலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மேலும் இந்த சம்பவம் குறித்து ெரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கம்பிகள் சரியாக பொருத்தப்படாததால் அறுந்து தொங்கிக் கொண்டிருந்ததா அல்லது மின் கம்பிகளை திருடும் முயற்சி நடந்ததா? என தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.