காய்கறி, இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்

முழு ஊரடங்கையொட்டி, நெல்லையில் காய்கறி, இறைச்சி வாங்குவதற்காக கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.;

Update: 2022-01-08 18:31 GMT
நெல்லை:
முழு ஊரடங்கையொட்டி, நெல்லையில் காய்கறி, இறைச்சி வாங்குவதற்காக கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

காய்கறி, இறைச்சி கடைகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கையொட்டி அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன.

இதையொட்டி மளிகை பொருட்கள், காய்கறி, இறைச்சி வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமானவர்கள் குவிந்தனர். சில கடைகள், வணிக நிறுவனங்களில் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.

உழவர் சந்தை

பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியில் உழவர் சந்தை செயல்படும் 2 இடங்களிலும் காய்கறி கடைகளில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பலரும் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கி சென்றனர். பாளையங்கோட்டை மார்க்கெட்டில் மாலையில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்றனர்.

பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிந்து இருந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர். கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்குமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தினர்.

டாஸ்மாக் கடைகள்

நெல்லை மாநகர பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள் திரண்டு சென்று மது பாட்டில்களை போட்டி போட்டு மொத்தமாக வாங்கி சென்றனர். தச்சநல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டத்தால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்காமல் மதுபாட்டில்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்