முழு ஊரடங்கால் பஸ்கள் இன்று ஓடாது-சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை
முழு ஊரடங்கால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஸ்கள் ஓடாது. மேலும், சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை,
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில் ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இனதால் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பொதுப்போக்குவரத்து இயங்காது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாது. அத்தியாவசிய பணிகளான மருத்துவ பணிகள், மருந்தகங்கள், பால் வினியோகம், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் இயங்கும். ஓட்டல்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் வினியோகத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த நிலையில் முழு ஊரடங்கையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களாக 24 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தொழிற்சாலைகள் தொடர்பான பகுதிகள் 12 இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் 10 சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படும்.
மேலும் மாவட்டத்திற்குள் 42 இடங்களில் வாகன சோதனை நடைபெறும். 22 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். மாவட்டம் முழுவதும் 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர ஊர்க்காவல் படையினர் 100 பேர் பணியில் ஈடுபடுகின்றனர்.
மொய் விருந்துக்கு தடை
கீரமங்கலம், ஆலங்குடி, வடகாடுகளில் மொய் விருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அரசின் அனுமதிபடி நடைபெறும். இதுதவிர அரசின் வழிகாட்டு நடைமுறைகள் மட்டும் அனுமதிக்கப்படும். ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது அதிகாரிகள் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். நோய் பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தை, மீன் மார்க்கெட்
மணமேல்குடியில் மீன் மார்க்கெட்டை ஒட்டி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமுடக்கம் என்பதால் நேற்று சந்தை செயல்பட்டது. வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் கடைபோட்டு வியாபாரம் செய்தனர். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் மீன் மார்க்கெட்டும் செயல்படாததால் மீன் பிரியர்கள் மீன் வகைகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சந்தை மற்றும் மீன்மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது. டாஸ்மாக் கடைகளிலும் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் முக்கண்ணாமலைப்பட்டி வாரச்சந்தை மற்றும் காய்கறி கடைகளிலும் தங்களுக்கு தேவையானவற்றை பொதுமக்கள் வாங்கி சென்றனர். மேலும் மளிகை கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.