இளம்பெண்ணின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் அபேஸ்
திட்டக்குடியில் இளம்பெண்ணின் ஏ.டி.எம். கார்டை திருடி பணத்தை அபேஸ் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
திட்டக்குடி, ஜன.9-
திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி நர்மதா(வயது 21). இவர், பணம் எடுப்பதற்காக திட்டக்குடியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தர உதவுவதாக கூறினார். இதை நம்பி நர்மதாவும், தான் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்து, 4 இலக்க ரகசிய எண்ணையும் கூறினார். அதை பெற்றுக்கொண்ட அந்த வாலிபர், ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதுபோல் பாவணை செய்தார். பின்னர், பணம் வரவில்லை என்று கூறி ஒரு ஏ.டி.எம். கார்டை நர்மதாவிடம் கொடுத்தார். அவரும் அதை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
பணம் அபேஸ்
சிறிது நேரத்தில் நர்மதாவின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.13 ஆயிரத்து 500 ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக இருந்தது.
உடனே நர்மதா, தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை எடுத்து பார்த்தார். அது வேறொருவருடைய ஏ.டி.எம். கார்டு என்று தெரிந்தது. அப்போதுதான், அந்த வாலிபர் தனது ஏ.டி.எம். கார்டை திருடி, அதன் மூலம் பணத்தை அபேஸ் செய்திருப்பது நர்மதாவுக்கு தெரியவந்தது.
வாலிபர் கைது
இது குறித்து நர்மதா, திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் பொருத்திருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுந்தர்ராஜ்(29) என்பவர், நர்மதாவை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.