கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களில் முறைகேடாக பட்டா பெற்றவர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களில் முறைகேடாக பட்டா பெற்று பயன்படுத்தி வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்தார்
சின்னசேலம்
பஞ்சமிநிலம் மீட்பு
சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக சுமார் 120 ஏக்கர் பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டத்துக்கு பிறகு கிராமத்தில் குடியேறிய ஆதிதிராவிடர் அல்லாத 32 பேர் பஞ்சமி நிலங்களை சட்டவிரோதமாக கைப்பற்றி 1980-1990-ம் ஆண்டு கால கட்டங்களில் முறைகேடாக பட்டா பெற்று கடந்த 40 ஆண்டுகளாக பயன்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பூசப்பாடி கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முறைகேடாக பெற்ற 32 பட்டாதாரர்களின் பட்டாக்கள் அதிகாரபூர்வமாக ரத்து செய்து நில ஆவணங்களில் பஞ்சமி நிலங்கள் என பதிவு செய்யப்பட்டது.
கலெக்டர் பார்வையிட்டார்
இந்த நிலையில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலங்களை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து தனிநபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்ட 30 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியையும் அவர் பார்வையிட்டார். நிலம் அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டதையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் என கண்டறியப்படும் அனைத்து நிலங்களும் உரிய விசாரணை மற்றும் பரிசீலனைக்குப் பின் மீட்கப்பட்டு ஆதிதிராவிட இன மக்களுக்கு வழங்கப்படும். பஞ்சமி நிலங்களை முறைகேடாக பட்டா பெற்று பயன்படுத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, வருவாய் கோட்டாட்சியர் சரவணன், தாசில்தார் அனந்தசயனன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.