புதுவையில் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்த ஆவணப்பட குறுந்தகடு
சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்த ஆவணப்பட குறுந்தகட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்
புதுச்சேரி, ஜன.
புதுவையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், குவளைகள், தட்டுகள், உணவு பொருட்களை எடுத்துச்செல்ல உபயோகிக்கும் பிளாஸ்டிக் தாள், தண்ணீர் பாக்கெட்டுகள், ஸ்ட்ரா மற்றும் விரிப்பான்கள் ஆகிய 8 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்களை உற்பத்தி செய்வது, விற்பது, உபயோகிப்பது சட்டப்படி குற்றமாகும். இதுதொடர்பாக 8 அதிகாரிகள் கொண்ட குழு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து பொதுமக்கள் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீமைகள், சுகாதார சீர்கேடுகளை விளக்கும் ஆவணப்படத்தை புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் தயாரித்துள்ளது.
இந்த ஆவணப்படத்துக்கான குறுந்தகட்டை சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். அதை சுற்றுச்சூழல்துறை செயலாளர் ஸ்மித்தா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.