பாலக்கோடு அருகே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
பாலக்கோடு அருகே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் போராட்டம்
தர்மபுரியில் இருந்து ஓசூர் வரை பாலக்கோடு அருகே கிருஷ்ணன் கொட்டாய், காந்திநகர், காமராஜ் நகர், கே.செட்டிஅள்ளி, தோமலஅள்ளி, பில்லகொட்டாய், வீரபத்திரன் கோவில் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் விவசாய வாகனங்கள், உழவு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் சென்று வர மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கிராம மக்களின் வசதிக்காக மேம்பாலம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த நிலையில் மேம்பாலம் அமைக்காமல் நேற்று சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை பணிக்காக மண் ஏற்றி வந்த லாரியை கிருஷ்ணன் கொட்டாய் பகுதியில் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காந்தி நகர், காமராஜ் நகர், வீரபத்திரன் கோவில் உள்ளிட்ட 12 கிராம மக்கள் வசதிக்காக கிருஷ்ணன் கொட்டாய் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.