பெருந்துறை அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது
பெருந்துறை அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள பகலாயூரைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 41). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். லோகநாதன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவை திறந்து 10 பவுன் நகை மற்றும் 11 தங்க காசுகள் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பகலாயூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு பதிவுகளை ஆய்வு செய்த போது, அதில் சம்பவம் நடந்த தினம் அன்று மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுற்றியது பதிவாகியிருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் அந்த உருவங்களை வைத்து போலீசார் 2 பேரையும் கண்காணித்தபோது அவர்கள் தேனி மாவட்டம் கம்பத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நெய்யூரை சேர்ந்த மைக்கேல் மகன் ஸ்டீபன் (35), கம்பம் தாத்தப்பன் குளம் என்ற இடத்தை சேர்ந்த அப்பாஸ் மந்திரியின் மகன் முகமது நாகூர் மீரான் கனி (31) என்பதும், இவர்கள் 2 பேரும் லோகநாதனின் வீடு புகுந்து நகையை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 12½ பவுன் தங்க நகை மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.