தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் கனிமொழி எம்.பி. ஆய்வு
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 1,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி:
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் 1,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த வார்டை கனிமொழி எம்.பி. மற்றும் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவலை எதிர்கொள்ளும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,000-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. அதில் 900-க்கும் மேற்பட்டவை ஆக்சிஜன் வசதி படுக்கைகள் ஆகும். நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் 250 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 35 நபர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
ஒமைக்ரான் மற்ற நாடுகளில் தற்போது அதிக பாதிப்பு ஏற்படுத்தாவிட்டாலும், பரவும் தன்மை வேகமாக இருக்கிறது. அதனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோய் பரவுதலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தையும் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ்ஜெபமணி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முருகவேல், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.