சுடுகாட்டை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூரில் மக்கள் பயன்பாட்டில் உள்ள சுடுகாட்டை மாநகராட்சி ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.;

Update: 2022-01-08 14:54 GMT
வீரபாண்டி
திருப்பூரில் மக்கள் பயன்பாட்டில் உள்ளசுடுகாட்டை மாநகராட்சி ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். 
சுடுகாடு 
திருப்பூர் பல வஞ்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் 3 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது. அதில்  2 ஏக்கர் பரப்பளவில் குடிநீர் தொட்டி மற்றும் குப்பை குடோன் கட்டப்பட்டுள்ளது. மேலும் 90 சென்ட் இடத்தில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த  சுடுகாட்டை   பலவஞ்சிபாளையம், வீரபாண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 
இந்த நிலயைில் சுடுகாடாக பயன்படுத்தும் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் புதிய கட்டிடம் ஒன்றை  கட்டி வருகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கட்டிடத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  
பேச்சுவார்த்தை 
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது  “  பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சுடுகாட்டில் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள சுடுகாடு காணாமல் போய்விடும். எனவே கட்டடம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றனர். 
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அதே பகுதியில் மின்மயானம் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் தற்போது நடைபெற்று வரும் பணி மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்