18-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம்
நூல் மற்றும் பஞ்சு ஏற்றுமதியை மத்திய அரசு தடை விதிக்கக்கோரி நிட்மா சங்கத்தின் சார்பில் வருகிற 18-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர்
நூல் மற்றும் பஞ்சு ஏற்றுமதியை மத்திய அரசு தடை விதிக்கக்கோரி நிட்மா சங்கத்தின் சார்பில் வருகிற 18-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உற்பத்தி நிறுத்தம்
அபரிமிதமான பஞ்சு மற்றும் நூல் விலை ஏற்றத்தின் காரணமாக திருப்பூர் பின்னலாடை தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் தொழில் நடத்த பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் சார்பில் உற்பத்தி நிறுத்த போராட்டம் வருகிற 17,18-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா) அலுவலகத்தில் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் அகில் ரத்தினசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜாமணி, பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ரெயில் மறியல் போராட்டம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மத்திய அரசு நூல் மற்றும் பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். இந்திய பருத்தி கழகம் இடைத்தரகர்களுக்கு வினியோகிப்பதால் பஞ்சை பதுக்கி வைத்து செயற்கையான விலையேற்றம் செய்யப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் நூற்பாலைகளுக்கு மட்டுமே தேவைக்கேற்ப பஞ்சை வழங்க வேண்டும்.
இதை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு நிட்மா சங்கத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர் ரெயில் நிலையம் சென்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்துக்கு மற்ற அனைத்து உற்பத்தியாளர் சங்கத்தினரும், தொழிற்சங்கத்தினரும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.