தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-01-08 14:35 GMT
திண்டுக்கல்:
சேதமடைந்த மின்கம்பம்
சாணார்பட்டி ஒன்றியம் கோணப்பட்டி தெற்கு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகிறது. இதே நிலை நீடித்தால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டு வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காளிதாஸ், கோணப்பட்டி.
இடிந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர்
திண்டுக்கல் மீன்மார்க்கெட் நுழைவு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள். அந்த நேரத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும். எனவே சுற்றுச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
கழிப்பறை வசதி வேண்டும்
பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஆயக்குடி பகுதியில் கழிப்பறை வசதி செய்யப்படவில்லை. அங்குள்ள குளக்கரையை கழிப்பறையாக பக்தர்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக கழிப்பறை வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரமு, ஆயக்குடி.
எரியாத உயர்மின் கோபுர விளக்கு
திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நட்டு வைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து கடந்த சில வாரங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. மேலும் திருட்டு பயமும் உள்ளது. எனவே பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், திண்டுக்கல்.

மேலும் செய்திகள்