சுற்றுலா தலங்கள் மாலை 3 மணிக்கு பிறகு மூடப்பட்டன

நீலகிரி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அங்கு சுற்றுலா தலங்கள் மாலை 3 மணிக்கு பிறகு மூடப்பட்டன.;

Update: 2022-01-08 14:32 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அங்கு சுற்றுலா தலங்கள் மாலை 3 மணிக்கு பிறகு மூடப்பட்டன. 

புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா தலங்களில் பார்வை நேரம் குறைக்கப்பட்டது. அதன்படி 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.

வழக்கமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் காலை 7 மணி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் நேற்று காலை 10 மணி முதல் நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இதனால் நுழைவு வாயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

புல்வெளிகள் மூடல்

நுழைவுசீட்டு வழங்கும்போது பெயர், செல்போன் எண், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பூங்காவில் சுற்றுலா பயணிகள் 1½ மணி நேரம் மட்டுமே சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டனர். 

புல்வெளிகளில் அமர தடை விதிக்கப்பட்டு, பெரிய புல்வெளி மைதானம் மற்றும் பிற புல்வெளிகள் கயிறு கட்டி மூடப்பட்டது.
சுற்றுலா பயணிகள் ஒரு வழியாக சென்று வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்ததுடன், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். புகைப்படம் எடுத்தவுடன் கழற்றிய முக்ககவசத்தை மீண்டும் அணிய அறிவுறுத்தப்பட்டது.

கூட்டம் அதிகம்

ஊட்டி படகு இல்லத்தில் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிப்பு பதாகை ஒட்டப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். குறைந்த நபர்களே படகு சவாரி மேற்கொண்டனர். புதிய கட்டுப்பாட்டை தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேல் நுழைவு சீட்டு வழங்கப்படாததோடு, உள்ளே இருந்த சுற்றுலா பயணிகள் வெளியே அனுப்பப்பட்டனர்.

அதன்பின்னர் மூடப்பட்டதால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது. புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்ததை தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று 2,867 பேர், ஊட்டி படகு இல்லத்துக்கு 2,859 பேர் வருகை தந்தனர். நேற்று முன்தினத்தை விட சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்ற சுற்றுலா தலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்