கட்டுப்பாட்டு பகுதிகள் 26 ஆக அதிகரிப்பு
கட்டுப்பாட்டு பகுதிகள் 26 ஆக அதிகரிப்பு
கோவை
கோவை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து உள்ளது. வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க 32 மருத்துவ குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மருத்துவக் குழுக்கள்
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 100-க்கு கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 400-ஐ கடந்து விட்டது.
எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் அறிகுறி இன்றி தொற்று உறுதி யானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கோவையில் இதுவரை 1,303 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்க டாக்டர், நர்ஸ் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அடங்கிய 32 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
பரவல் அதிகம்
இது குறித்து சுகாதார துறையினர் கூறியதாவது
கடந்த காலங்களில் சூலூர், மதுக்கரை, துடியலூர், அன்னூர் உள் ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் கண்டறியப் பட்டது.
தற்போது அந்த இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒருவருக்கு தொற்று உறுதியானால், அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
தற்போது கோவையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் கொரோனா பரவல் 1 சதவீதத்திற்கும் கீழ் இருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் 3.1 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
அலட்சியம் வேண்டாம்
கோவை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் மாநகரில் உள்ள தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து உள்ளது.
கடந்த காலங்களில் தொற்று ஏற்பட்டால் அந்த வீதி முழுமையாக அடைக்கப்பட்டது. ஆனால் தற்போது பாதிப்பு ஏற்பட்ட வீடுகள் அல்லது அதையொட்டிய சில பகுதிகளை மட்டும் அடைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.
இந்த வகை வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. டெல்டா வகை கொரோனா பாதிப்பும் காணப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். வெளிஇடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்.
கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.