முக கவசமின்றி அதிக பயணிகளை அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை
முக கவசமின்றி அதிக பயணிகளை அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்தார்.
மாமல்லபுரம்,
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் சிலர் ஒரே நேரத்தில் சமூக இடைவெளியில்லாமல் அதிக பயணிகளை ஆட்டோவில் ஏற்றி செல்வதாகவும் அவர்களில் பலர் முக கவசம் அணியாமல் இருப்பதாகவும் மாமல்லபுரம் போலீசுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி உள்ளிட்ட போலீசார் மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்களை அழைத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் கூறுகையில்:-
அனைத்து ஆட்டோ டிரைவர்களும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் சமூக இடைவெளி இல்லாமல் அதிக பயணிகளை ஆட்டோவில் ஏற்றக்கூடாது. போக்குவரத்து விதிமுறைப்படி அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஆட்டோவில் ஏற்ற அனுமதிக்க வேண்டும், அனைவரும் முக கவசம் அணிந்திருக்கிறார்களா? என்று பார்த்தபிறகே ஆட்டோவில் ஏற அனுமதிக்க வேண்டும்.
குறிப்பாக ஆட்டோ டிரைவர்களும் கவனக்குறைவாக இல்லாமல் கண்டிப்பாக முக கவசம் அணிந்துதான் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தினார்.
அப்போது கடற்கரை சாலையில் இருந்து அதிக பயணிகளை ஏற்றி கொண்டு வந்த வெளியூர் ஆட்டோவை மடக்கிய போலீசார் சமூக இடைவெளி இல்லாமல் 10-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அவர்களை இறக்கிவிட்டு அந்த ஆட்டோ டிரைவர் மீது சாலை, போக்குவரத்து விதிகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி சென்றதாக வழக்குப்பதிவு செய்தனர்.