திருத்தணி முருகன் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

வார இறுதி நாளில் அரசு வழிகாட்டுதல் படி வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டதால், திருத்தணி முருகன் கோவில் வாசலில் பக்தர்கள் சாமி தரிசனம செய்தனர்.

Update: 2022-01-08 08:56 GMT
திருத்தணி,

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வெளி மாநில மற்றும் மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இங்கு தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய விசேஷ நாளில் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கொரோனா 3-வது அலையின் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை கோவிலுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவில் உள்ளே பக்தர்கள் செல்லாதவாறு மலைப்பாதை மற்றும் மலைக்கோவில் மேல் உள்ள நுழைவு பகுதியில் தடுப்புகளை அமைத்தனர். அதையும் மீறி நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதேபோல் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உடன் இணைந்த 30 உப கோவில்களும் அரசு வழிகாட்டுதலின்படி மூடப்பட்டுள்ளது.

தற்போது மார்கழி மாதம் மற்றும் வெள்ளிக்கிழமை என்பதால் அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்த நிலையில், முருகப்பெருமானை தரிசிக்க முடியாமல் கோவில் வெளியே நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்