சென்னையில் சாலைப்பணிகளை கண்காணிக்க துணை கமிஷனர்கள் நியமனம் - ககன்தீப் சிங் பேடி தகவல்
சென்னையில் சாலைப்பணிகளை கண்காணிக்க துணை கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் பஸ் சாலைகள் சீரமைக்கும் பணிகள் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அண்ணாநகர் 13-வது பிரதான சாலையில் நடைபெற்று வந்த சாலை அமைக்கும் பணியினை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை துணை கமிஷனர்கள், வட்டார துணை கமிஷனர்கள், தலைமை என்ஜினீயர்கள் மற்றும் என்ஜினீயர்கள் பணி நடைபெற்று வரும் இடங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு தரக்கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என ஆய்வு செய்ய ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினார். இதையடுத்து நிருபர்களிடம் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க முதல்-அமைச்சரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில், ரூ.213 கோடி மதிப்பில் சுமார் 312 கி.மீ. நீளம் கொண்ட 1,656 பஸ் மற்றும் உட்புறச் சாலைகள் சீரமைப்பு பணிகளுக்கு சிங்காரச் சென்னை 2.o உள்பட பல்வேறு திட்ட நிதியின் கீழ் ஒப்பந்தம் கோரப்பட்டு பெரும்பாலான பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள பணிகளுக்கும் ஓரிரு நாட்களில் பணி ஆணை வழங்கப்படும்.
மேலும், கடந்த ஆண்டு பணி ஆணை வழங்கப்பட்ட 7 ஆயிரத்து 132 சாலைப் பணிகளில் பருவமழையின் காரணமாக நிறுத்தப்பட்ட சுமார் 1,200 சாலைப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைப் பணிகள் அனைத்தையும் உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சாலையின் தரம் பணி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு இருப்பதை உறுதி செய்ய கலந்தாலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சியின் சார்பில் துணை கமிஷனர்கள் உள்பட உயர் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து தரத்தினை உறுதி செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷு மஹாஜன், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், தலைமை என்ஜினீயர் எஸ்.ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.