மயிலாடுதுறை மாவட்டத்தில், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன
கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
மயிலாடுதுறை:
கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
கோவில்கள் மூடப்பட்டன
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் வழிபாட்டு தலங்களுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக மயிலாடுதுறையில் மயூரநாதர் கோவில் மூடப்பட்டு பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல நகரில் உள்ள திருவிழந்தூர் பரிமளரங்கநாதர்கோவில், புனுகீஸ்வரர் கோவில், ஐயாறப்பர் கோவில், காசிவிஸ்வநாதர்கோவில், வள்ளலார்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் மூடப்பட்டு வளாகங்கள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன.
திருக்கடையூர்
திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வர். இந்த கோவிலில் மட்டுமே ஆயுள் ஹோமம், மணிவிழா, சஷ்டியப்தபூஜை, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்தர்கள் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். கோவில் வளாகம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சீர்காழி
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் கொரோனா ஊரடங்கையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் வாயில் மூடப்பட்டதால் நேற்று கோவில் நுழைவு வாயிலில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு கோவில் வாயில் மூடப்பட்டதால் வைத்தீஸ்வரன் கோவில் கீழவீதி வெறிச்சோடி காணப்பட்டது.