பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள அரசு தமிழ் பள்ளிக்கு புதிய கட்டிடம் - ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள அரசு தமிழ் உயர் ஆரம்ப பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. பூமி பூஜை அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

Update: 2022-01-07 22:42 GMT
பெங்களூரு:

பூமி பூஜை

  பெங்களூரு சிவாஜிநகர் திம்மையா ரோட்டில் 100 ஆண்டுகள் பழமையான அரசு தமிழ் உயர் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் கால்பந்து மைதானம் அமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றியும், பூமி பூஜையும் செய்தும் புதிய கட்டிட கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

  மேலும் மேடையில் இருந்த சர்வக்ஞர், திருவள்ளுவரின் உருவப்படத்திற்கு ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் எல் அன்ட் டி நிறுவன இணை பொது மேலாளர் ஸ்ரீதர், காந்திநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் சரவணா, பாரதிநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரா, முன்னாள் கவுன்சிலர்கள் ஆனந்தகுமார், சகீல் அகமது, பள்ளியின் தலைமை ஆசிரியை கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேதனையாக இருந்தது

  இந்த நிகழ்ச்சியில் ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

  நான் எம்.எல்.ஏ.வாக உள்ள சிவாஜிநகர் தொகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தமிழ் பள்ளி இருப்பது பெருமையாக உள்ளது. ஆனால் இந்த பள்ளி தற்போது சிதிலமடைந்து உள்ளது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்தேன். இதுபற்றி எல் அன்ட் டி நிறுவனத்தின் இணை பொது மேலாளர் ஸ்ரீதரிடம் பேசினேன். அவரும் புதிய கட்டிடம் கட்டி தருவதாக உறுதி அளித்து இருந்தார்.

  எல் அன்ட் டி ஒத்துழைப்புடனும், எனது எம்.எல்.ஏ. நிதியில் இருந்தும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்து பார்த்தபோது பள்ளி மைதானம் முழுவதும் குப்பை கழிவுகள் குவிந்து கிடந்தது. கழிவுநீரும் தேங்கி கிடந்தது. அதை பார்க்க வேதனையாக இருந்தது. தற்போது இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. கூடிய விரைவில் புதிய கட்டிடத்தை கட்டி தரும்படி ஸ்ரீதருக்கு கோரிக்கை விடுக்கிறேன். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு மீது உள்ள ஆர்வத்தால் இங்கு கால்பந்து மைதானம் அமைக்கப்படுகிறது.
  இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் பேசிய ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ.

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்து ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழில் வணக்கம் கூறினார். பின்னர் அவர் கன்னடத்தில் பேசினார். அப்போது அடிக்கடி அவர் தமிழிலும் பேசினார். அப்போது எனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும். முழுமையாக பேச கற்று வருகிறேன் என்று கூறினார். மேலும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மக்களிடம் குறைகளை தமிழிலேயே கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்