திட்டமிட்டபடி நாளை பாதயாத்திரை தொடங்கும் - டி.கே.சிவக்குமார் அறிவிப்பு

திட்டமிட்டபடி நாளை பாதயாத்திரை தொடங்கும் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2022-01-07 22:37 GMT
பெங்களூரு:

  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விசாரணை நடத்த வேண்டும்

  மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பாதயாத்திரை திட்டமிட்டப்படி நாளை மறுநாள்(அதாவது நாளை) மேகதாதுவில் இருந்து தொடங்கும். இதை யாராலும் தடுக்க முடியாது. கர்நாடகத்தில் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

  கர்நாடகத்தில் 2 சதவீதம் பேருக்கு கூட பாதிப்பு இல்லை. ஊரடங்கை அமல்படுத்த அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. கொரோனா 2-வது அலையின்போது 800 டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆஸ்பத்திரிகளில் மொத்த படுக்கைகளில் 40 சதவீதம் நிரம்பி இருந்தது. அதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

சுற்றுலா தலங்கள்

  கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்தை தாண்டினால் ஊரடங்கை அமல்படுத்துவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார். ஆனால் மாநிலத்தில் தற்போது பாதிப்பு விகிதம் 3.9 சதவீதமாக உள்ளது. பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். மாநிலத்தில் எங்கும் சுற்றுலா தலங்களை மூடவில்லை. ஆனால் ராமநகரில் மட்டும் சுற்றுலா தலங்களை மூடியுள்ளனர்.

  இது கொரோனா தடுப்பு ஊரடங்கு அல்ல. இது பா.ஜனதா ஊரடங்கு. நானும், சித்தராமையா 2 பேர் பாதயாத்திரை நடத்துவோம். நிச்சயம் நாங்கள் நடந்தே தீருவோம். கர்நாடக வரலாற்றில் நாங்கள் இத்தகைய பழிவாங்கும் அரசியலை பார்த்ததே இல்லை.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்