கர்நாடகத்தில் 55 மணி நேர வார இறுதி நாட்கள் ஊரடங்கு அமல்

கர்நாடகத்தில் 55 மணி நேர வார இறுதி நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். அத்தியாவசிய சேவைகளுக்கு தடை இல்லை என்று அரசு கூறியுள்ளது.

Update: 2022-01-07 22:33 GMT
பெங்களூரு:

வார இறுதி நாட்கள் ஊரடங்கு

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க கர்நாடகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து வார இறுதி நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு கடந்த 4-ந் தேதி அறிவித்தது. அதன்படி கர்நாடகத்தில் வார இறுதி நாட்கள் ஊரடங்கு தொடங்கியுள்ளது.

  நேற்று இரவு 10 மணிக்கு இந்த ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு 55 மணி நேரம் அதாவது வருகிற 10-ந் தேதி அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். இந்த ஊரடங்கையொட்டி பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களுக்கு செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

வாடகை கார்கள்

  மேலும் அத்தியாவசிய சேவைகள் அதாவது ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பால் விற்பனை கூடங்கள் செயல்படலாம். காய்கறி-பழங்கள், இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளில் பொருட்களை விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து வகையான தனியார் நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்படலாம். அதில் பணியாற்றும் ஊழியர்கள் நிறுவன அடையாள அட்டையை காட்டி பயணிக்க அனுமதிக்க அளிக்கப்பட்டுள்ளது.

  சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பிற கடைகளை திறக்க அனுமதி இல்லை. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி உண்டு. அவர்களுடன் குடும்பத்தினரும் செல்லலாம். பஸ், ரெயில், விமான நிலையங்களுக்கு செல்ல வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பயணம் செய்பவர்கள் முன்பதிவு டிக்கெட் அல்லது ஏதாவது ஒரு ஆவணத்தை காட்ட வேண்டும்.

500 பஸ்கள் இயக்கம்

  பெங்களூருவில் முக்கியமான மேம்பாலங்கள் இரும்பு தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன. அதனால் வாகன ஓட்டிகள் மேம்பாலத்திற்கு அடியில் உள்ள சாலையில் செல்கிறார்கள். இரவு 8 மணிக்கு ஊரடங்கு தொடங்கியதால், 7 மணிக்கே பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு சென்று சேர்ந்தனர். 8 மணிக்கு பிறகு சாலைகளில் வாகனங்கள் மிக குறைவாக காணப்பட்டன.

  போலீசார் ரோந்து வாகனங்களில் முக்கிய சாலைகளில் ரோந்து வந்து மக்களை எச்சரித்தனர். ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுபவர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுகிறவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் அரசால் அனுமதி அளிக்கப்பட்ட ஊழியர்கள் பயணிக்க பெங்களூருவில் சுமார் 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரெயில்கள்

  பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், பப்புகள் போன்றவை மூடப்படும். உணவகங்கள் திறந்திருக்கும். அதில் உணவுகளை பார்சல் வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவசர சேவைகளை வழங்கும் மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளது. வீடுகளுக்கு பொருட்களை நேரடியாக வினியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  மின் வணிகம் 24 மணி நேரமும் செயல்படலாம். ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள், விமானங்கள் எப்போதும் போல் இயங்கும். இந்த நிலையங்களுக்கு அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுபான கடைகள் மூடல்

  இந்த வார இறுதி நாட்கள் ஊரடங்கின்போது திருமணங்கள் நடைபெறலாம். ஆனால் உள் அரங்கில் 100 பேரும், திறந்த வெளியாக இருந்தால் 200 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அதில் பணியாற்றுகிறவர்கள் வழக்கம் போல் தங்களின் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  மதுபான கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் அந்த கடைகளும் மூடப்பட்டுள்ளன. மொத்தத்தில் கர்நாடகத்தில் 55 மணி நேரம் வாகனங்களின் சத்தம் இன்றி அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது. கர்நாடகத்தில் 5½ மாதங்களுக்கு பிறகு மீண்டும் வார இறுதி நாட்கள் ஊரடங்கு தொடங்கியுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து 55 மணி நேரம் வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டும். இந்த ஊரடங்கை அமல்படுத்த பெங்களூருவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவையின்றி வெளியில் நடமாடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்