மனைவியை கொன்று உடலை வீட்டுக்குள் புதைத்த விவசாயி

சித்ரதுர்கா மாவட்டத்தில் மனைவியை கொன்று உடலை வீட்டுக்குள் புதைத்த விவசாயி கைது செய்யப்பட்டார். தன் மீது சந்தேகம் வராமல் இருக்க அவர் அதே வீட்டில் 12 நாட்கள் வசித்த பயங்கரம் நடந்துள்ளது.

Update: 2022-01-07 22:30 GMT
சித்ரதுர்கா:

நடத்தையில் சந்தேகம்

  சித்ரதுர்கா மாவட்டம் கொனனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பா(வயது34). விவசாயி. இவரது மனைவி சுமா(30). நாகப்பா, தனது மனைவியுடம் அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

  அதைத்தொடந்து கடந்த மாதம்(டிசம்பர்) 26-ந் தேதி வீட்டில் இருந்த சுமா திடீரென மாயமானார். அதனால் பயந்துபோன சுமாவின் குடும்பத்தார் அவரை கண்டுபிடித்து தருமாறு பரமசாகரா போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சுமாவையும் தேடி வந்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

  அப்ேபாது போலீசாருக்கு நாகப்பா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணையை நடத்தினர். அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது சுமாவை கொலை செய்ததை நாகப்பா ஒப்புக்கொண்டார். மேலும், கொலை செய்து தனது மனைவி உடலை வீட்டின் நடுவே குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் அவர் கூறினார். மேலும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க தான் அங்கேயே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

  இதையடுத்து நாகப்பாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சுமாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மக்கள் பீதி

  கடந்த 12 நாட்களுக்கு முன்பே சுமாவை கொலை செய்து உடலை புதைத்துவிட்டு யாருக்கும் தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க அதே வீட்டில் தனிமையில் நாகப்பா வசித்து வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்