ஒரே நாளில் 200பேருக்கு கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டியுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கைகளை அதிகரிக்க கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.;
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டியுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கைகளை அதிகரிக்க கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் அதிர்ச்சி
குமரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 15-க்குள்ளாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. திடீரென உயர்ந்துள்ள இந்த எண்ணிக்கை மாவட்ட மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
60,888 ஆக உயர்வு
மொத்தம் 3,479 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 108 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் 14 பேரும், கிள்ளியூர் வட்டாரத்தில் 5 பேரும், குருந்தங்கோடு வட்டாரத்தில் 13 பேரும், மேல்புறம் வட்டாரத்தில் 3 பேரும், முன்சிறை வட்டாரத்தில் 20 பேரும், நாகர்கோவில் நகரில் 33 பேரும், ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் 5 பேரும், திருவட்டார் வட்டாரத்தில் 4 பேரும், தோவாளை வட்டாரத்தில் 3 பேரும், தக்கலை வட்டாரத்தில் 8 பேரும் அடங்குவர்.
அவர்களில் 55 பேர் ஆண்கள், 42 பேர் பெண்கள், 7 சிறுவர்கள், 4 சிறுமிகள் ஆவர். இவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி, தக்கலை ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,888 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 3 பேரும், அறிகுறிகளுடன் 15-க்கு மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 98 பேர் கொேரானாவால் பாதிக்கப் பட்டனர்.
படுக்கைகள் அதிகரிக்க உத்தரவு
கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் படுக்கைகளை அதிகரிக்க மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதாவது தற்போது உள்ள 168 படுக்கைகளை உடனடியாக 238 படுக்கைகளாக அதிகரிக்கவும், இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் இந்த படுக்கைகளை 450 ஆகவும், ஒரு வாரத்துக்குள் 800 ஆகவும் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தும்படி தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகளை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.