சேவல் சண்டை நடத்த அனுமதி

சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.;

Update:2022-01-08 01:26 IST
மதுரை, 
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தங்கமுத்து, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், உத்தமபாளையம் பகுதியில் உள்ள தாமஸ் நகரில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை நடத்த உள்ளோம். அரசு பிறப்பித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறி முறைகளின்படி அனைத்துவித முன்னேற்பாடுகளுடன் சேவல் சண்டையை நடத்துவோம். வருகிற 16-ந்தேதி இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தோம். கோர்ட்டு உத்தரவு இருந்தால் மட்டுமே சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். எனவே எங்கள் பகுதியில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, சேவல் சண்டையின்போது சேவலின் கால்களில் பிளேடு, கத்தி உள்ளிட்டவை கட்டக்கூடாது. சேவல் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்தக்கூடாது என உத்தரவிட்டார். மேலும் வருகிற 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், மறுநாள் 17-ந்தேதி சேவல் சண்டை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்