சேலத்தில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
கொரோனா விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் சேலத்தில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர்.
சேலம், ஜன.8-
கொரோனா விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் சேலத்தில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர்.
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருவார்கள் என்பதால் நேரடி தரிசனம் செய்ய தடை விதிக்கும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் சாமிக்கு பக்தர்கள் இல்லாமல் அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் கோவிலுக்கு செல்லாத வகையில் கதவுகள் மூடப்பட்டு இருந்தன. இதேபோல், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளிலும் வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சேலம் டவுன் ராஜகணபதி கோவிலில் நேற்று காலையில் அதிகளவில் பக்தர்கள் வந்தனர். ஆனால் கொரோனா பரவலால் பக்தர்கள் உள்ளே சென்று தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று அங்குள்ள அறிவிப்பு பலகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைபார்த்த பக்தர்கள் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதேபோல், கோட்டை மாரியம்மன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், சுகவனேசுவரர் கோவில், அம்மாபேட்டை காளியம்மன் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. இதனால் கோவில்களின் வாசல் முன்பு பக்தர்கள் நின்றுக்கொண்டு தரிசனம் செய்து வழிபட்டதை காணமுடிந்தது.
தேவாலயங்களில்...
சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயம், சி.எஸ்.ஐ. ஆலயம், அஸ்தம்பட்டி இம்மானுவேல் பேராலயம், ஜான்சன்பேட்டை அந்தோணியார் பேராலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் வார இறுதி நாட்களில் பிரார்த்தனைக்கு அனுமதி இல்லை. பள்ளிவாசல் மற்றும் மசூதிகளிலும் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. கொரோனா கட்டுப்பாடுகளால் பெரும்பாலான பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை தவிர்த்தனர்.