வெளியூர்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதிக்க வேண்டும். கலெக்டர் உத்தரவு

வெளியூர்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதிக்க வேண்டும்

Update: 2022-01-07 19:15 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர், கந்திலி, ஊராட்சி ஒன்றியங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஈடுபடுவது குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பத்தூரில்,  ஆதியூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த ஊராட்சி அளவில் கமிட்டி உருவாக்கி அதில் ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழு பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவை உருவாக்கி அதன் மூலம் ஒவ்வொரு வார்டு வாரியாக வெளியில் செல்பவர்கள், வெளியூரிலிருந்து வருபவர்கள், உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஆகியோரை கண்காணித்து அவர்களை பரிசோதனை செய்து பரிசோதனையின் முடிவு வெளிவரும் வரை அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இதுபோன்று மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கும் போது மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பை நிச்சயமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதனை உள்ளாட்சி பிரதிநிதிகள் குழு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

திருப்பத்தூர், கந்திலி கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி திருமுருகன், விஜியா அருணாச்சலம், ஊராட்சி மன்ற கூட்டமைப்புத் தலைவர்கள் ஆனந்தகுமார், ஏசி.சுரேஷ்குமார், உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்