தனுஷ்கோடி செல்ல திடீர் தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறையினர் திடீரென தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சுற்றுலா பயணிகள் வராததால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

Update: 2022-01-07 19:09 GMT
ராமேசுவரம், 
"
தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறையினர் திடீரென தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சுற்றுலா பயணிகள் வராததால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

கட்டுப்பாடு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதிக்கு வழக்கம் போல் நேற்று காலை முதல் அனைத்து சுற்றுலா வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. 
காலை 8 மணி வரையிலும் அரசு பஸ் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்கள் வழக்கம் போல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சென்றுவர அனுமதிக்கப்பட்டன. அதன் பின்பு திடீரென தனுஷ்கோடி அரிச்சல்முனை செல்ல காவல்துறை திடீரென தடை விதித்தது. இதனால் தனுஷ்கோடி வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த குழப்பத்துடனும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

சுற்றுலா இடங்களுக்கு செல்ல அரசு எந்த ஒரு கட்டுப்பாடுகளும் விதிக்காத நிலையில் காவல்துறையினரே தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதித்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அது மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகளை நம்பி அரிச்சல் முனை மற்றும் கம்பிபாடு பகுதியில் சிப்பி, சங்கு மாலை, பழக்கடை, மீன் கடை உள்ளிட்ட ஏராளமான கடைகள் வைத்துள்ள 200-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
அதே வேளையில் பல மாநிலங்களில் இருந்தும் அரசுஅதிகாரிகள் குடும்பத்தோடு வந்த வாகனங்கள் அனைத்தும் தனுஷ்கோடி சென்று வர அனுமதிக்கப்பட்டது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்