புதர் மண்டி கிடக்கும் சமுதாய நலக்கூடம்
பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரலிங்கம்
பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமுதாய நலக்கூடம்
சிறிய கிராமங்களில் மண்டப வசதி இல்லாததாலும் பெரிய ஊர்களில் உள்ள பெரிய மண்டபங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்த முடியாமல் ஏழைகள், நலிவடைந்த மக்கள் சிரமப்பட்டனர். அவர்களின் குறையை நிவர்த்தி செய்து ஏழை, எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து தேவையான பகுதிகளில் சமுதாய நலக்கூடங்களை அமைகின்றன. பொதுவாக உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் குடிநீர், சமையலறை, சுகாதார வளாகங்கள், பாத்திரங்கள் மற்றும் இருக்கைகள் உள்ளிட்ட பிற வசதிகள் இல்லாததால் சமுதாய நலக்கூடங்கள் ஏழை எளிய மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவானதாக இருப்பதில்லை.
புதர்மண்டி கிடக்கிறது
இந்த நிலையில் மடத்துக்குளம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் எந்தவிதமான மண்டப வசதியும் இல்லை.
ஏதேனும் சுபகாரியங்கள் நடத்த வேண்டுமென்றால் பக்கத்திலுள்ள மடத்துக்குளத்தில் அல்லது குமரலிங்கம் பகுதியில் உள்ள மண்டபத்தில் தான் நடத்த வேண்டும்.
மண்டபத்தில் நடத்தும் அளவிற்கு வசதியில்லாத ஏழைகள் பயன்படுத்தும் வகையில் கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த சமுதாய நலக்கூடம் எந்தவித பராமரிப்பும், பாதுகாப்பும் இன்றி புதர்மண்டி கிடக்கிறது. இந்த சமுதாய நலக்கூடத்தில் தனியாக குடிநீர் இணைப்புகள், சமையலறை, பாத்திரங்கள் மற்றும் இருக்கைகள் வசதிகள் இல்லை.
இதனால் அப்பகுதி மக்களுக்கு பெரிய அளவில் எந்தவித உபயோகமும் இல்லை. மேலும் இரவு நேரங்களில் மது பிரியர்களின் திறந்தவெளி பாராக தற்சமயம் பயன்பாட்டில் உள்ளது.
எனவே மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த சமுதாயக் கூடத்தை பராமரிப்பு செய்து சுற்றுப்பகுதியை சீரமைத்து உபயோகத்திற்கு கொண்டுவரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.