திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இவை சாலையில் செல்லும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை விரட்டி செல்கிறது. குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை கடித்து தின்றுவிடுகின்றன. மேலும், சாலையில் செல்லும் இருசக்கர மற்றும் கார்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, கொடிக்கால்பாளையம் பகுதியில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா
முகமது கடாபி கொடிக்கால்பாளையம்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் இரை தேடி நாய்கள், மாடுகள் அதிகளவில்கூட்டமாக வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
சித்தாம்பூர் கிராமமக்கள் திருவாரூர்.
நாகை பழைய பஸ் நிலையம் மறைமலைஅடிகள் சிலை அருகே பாதாள சாக்கடை குழி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும்துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி பாதாள சாக்கடை குழி திறந்த நிலையில் இருப்பதால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் தவறி விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீரில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை குழியை மூட நடவடிக்கை எடுப்பார்களா
பொதுமக்கள் நாகை
மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதிவிளநகர் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலையில் வழித்துணை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவிலின் அருகே பயன்பாடற்ற நிலையில் குடிநீரேற்றும் மோட்டார் அறை உள்ளது. இந்த அறையை சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மோட்டார் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயன்பாடற்ற மோட்டார் அறையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
ஆறுபாதி விளநகர் கிராமவாசிகள, மயிலாடுதுறை.